17.5 C
New York

பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, கிழக்கில் அபகரிப்பு – சித்தார்த்தன் எம்.பி.

Published:

வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் பௌத்த மயமாக்கல் தீவிரமாக நடக்கின்றது. இந்துக் கோயில்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்படுவதுடன், பௌத்த விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. பாதுகாப்புக்கென ஒதுக்கப்படும் நிதி இதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படும் ஆலயங்களில் ஒன்றான கோணேச்சரத்தில் சுற்றுலாத்தலத்தை உருவாக்கி மிகப் பெரிய பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஆலயத்துக்குக் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. திருக்கோணேச்சர ஆலயத்தின் புனிதத் தன்மையை இல்லாதொழிக்க எடுக்கப்படும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

குருந்தூர்மலையிலும் ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டட நிர்மாணங்கள் இடம்பெறுகின்றன. இவை தமிழ் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தப் போவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றார். புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. பல அமைப்புகள் மீதான தடைகள் இப்போதும் உள்ளன. கொள்கை ரீதியான விடயமாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, ‘அரசியல் தீர்வு இன்றி இன இணக்கப்பாடு கிடையாது. இன இணக்கப்பாடு இல்லாவிட்டால் பொருளாதார வளர்ச்சி இருக்காது’ என்று கூறியுள்ளார். இதைப் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே அனைத்து இனத்தவர்களும் இணைந்து நாட்டை பொருளாதார ரீதியில் சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்ல முடியும்.- என்றார்.

Related articles

spot_img

Recent articles

spot_img