அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பகிர்ந்தால் பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படும். இந்த விடயத்தில் தெற்கு மக்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூட்டிய நீதியான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பு என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இந்த விவகாரத்தில் வடக்கு மக்களுடன் எங்களுக்குப் எந்தப் பிரச்சினையும் இல்லை. பொலிஸ் அதிகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பகிரங்க விவாதத்தை முன்னெடுத்து சகலரும் கூட்டாக ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்.
எமது நாட்டிலுள்ள ஒரு பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டுமெனில் எமது நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுப்படவேண்டும். தேசிய, இன, மத பேதமின்றியும் பாகுப்பாடு இன்றியும் பொதுவாக நாட்டுக்கு ஏற்புடைய முறையொன்றை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பதே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும்.
பொலிஸ் துறை அரசியல் மாயமாகியுள்ளது என்று தற்போதே மக்கள் கூறுகின்றனர். பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரும், ஒரு நிர்வாகத்தின் கீழும் பொலிஸ் துறை இருக்கும்போதே நிலைமை இதுவென்றால், ஒன்பது பொலிஸ் பிரிவுகள் உருவாகி 9 முதலமைச்சர்களின் கீழ் பொலிஸ் நிர்வகிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது தொடர்பில் சிந்தித்து பார்க்கவேண்டும்.
பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது மூலம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கு என்னவாகப் போகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். 13 ஆவது அரசமைப்பை பொறுத்தவரையில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த எனைய சகல அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்த தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்-என்றார்.