இந்த வருடத்தில் மீண்டுமொரு மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளியாகும் ஊகங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.
ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சாரக் கட்டணத்தில் விலை திருத்தம் இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை ஆண்டுக்கு இருமுறை திருத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு.
திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் ஏதுமின்றி, ஆண்டு முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது. தற்போது உள்ள மின் நிலையங்களின் முழு கொள்ளளவு மின் உற்பத்திக்கு பயன்பாட்டில் உள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
திட்டமிடப்பட்ட மின்வெட்டு இல்லாமல் தொடர்ச்சியான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கான விருப்பத் தேர்வுகள் மற்றும் விவசாயத்துக்காக வெளியிடக்கூடிய அதிகபட்ச நீர் விநியோகம் தொடர்பில் அமைச்சரவையுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
அடுத்த 12 மாதங்களுக்கு மின் உற்பத்தி, விவசாயத்திற்கான நீர் வெளியீடு, நீர் மின் திறன், அனல் மின்சாரம் கிடைக்கப்பெறும் விருப்பங்கள் தொடர்பான விவரங்கள் பகிரப்பட்டு விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.