யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றுமுன்தினம் ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் உட்பட ஆறு பேர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
ஆடையற்ற நிலையில் உடல்
கல்வியங்காட்டில் உள்ள ஜி.பி.எஸ். மைதானத்துக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 12) ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டிருந்தது. 54 வயதான கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது மனைவி முல்லைத்தீவில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றுக்காகச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாகவே இருந்துள்ளார். நேற்றுமுன்தினம் காலை உறவினர் ஒருவர் சென்றபோது, வீட்டுக்குள் வீழ்ந்த நிலையில் ஆடைகள் அற்ற நிலையில் இவர் காணப்பட்டார். கோப்பாய் பொலிஸாருக்கு இந்தத் தகவல் வழங்கப்பட்டது.
கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வுகளை ஆரம்பித்தனர்.
மகேந்திரன் தாக்குதலுக்கு உள்ளான தடயங்கள் கண்டறியப்பட்டன. அவரது உடலில் காணப்பட்ட அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக ஏற்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான், சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
அயலவர்கள் தகவல்
சடலமாக மீட்கப்பட்ட மகேந்திரனை சிலர் சம்பவ தினத்துக்கு முந்தையநாள் மாலை விசாரித்தனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அயலவர்கள் தெரிவித்தனர்.
பொலிஸார் அயலவர்களின் தகவல்களையும் கவனத்தில் எடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் முதலில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல் வெளிப்பட்டன.
சிறுமிக்கு நடந்து என்ன?
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு 8 வயதில் மகள் இருக்கின்றார். கொல்லப்பட்டவர் அவர்களுக்குத் தெரிந்தவரே. கடந்த 11ஆம் திகதி மகளை பாடசாலைக்குக் கொண்டுசென்று விடும்படி கேட்டிருக்கிறார் அந்தப் பெண். மகேந்திரனும் தனது சைக்கிளில் சிறுமியைப் பாடசாலையில் இறக்கி விட்டுள்ளார்.
அதன்பின்னர் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டுள்ளது. சிறுமி வீட்டில் வந்து வழமைக்கு மாறாக அமைதியாக இருந்துள்ளார். அதை எவரும் பெரிதாக எடுக்கவில்லை.
மறுநாள் பாடசாலை சென்ற சிறுமி மயங்கி வீழ்ந்துள்ளார். பாடசாலையில் இருந்து சிறுமியின் தாய்க்கு விவரம் தெரிவிக்கப்பட, தாய் முச்சக்கர வண்டியில் சென்று சிறுமியை வீட்டுக்கு ஏற்றி வந்திருக்கின்றார்.
வீட்டுக்கு வந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரித்த போது சிறுமி கூறிய தகவல்களில் இருந்து சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்திருக்கின்றது. சிறுமி மகேந்திரனையே அடையாளப்படுத்தியுள்ளார். தாய் இது தொடர்பாக தனது உறவினர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
அழைத்துக் சென்று தாக்குதல்
தாயின் உறவினர்கள் வந்து மகேந்திரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றிருக்கின்றனர். யாழ்ப்பாணம், சித்தன்கேணிப் பகுதியில் உள்ள ஓரிடத்தில் வைத்து மகேந்திரனை தாக்கி விசாரித்ததுடன், எச்சரித்திருக்கின்றனர். அங்கு மகேந்திரன் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகின்றது.
மகேந்திரனைனக் கடுமையாகத் தாக்கி எச்சரித்த அவர்கள் மீண்டும் மகேந்திரனைக் கொண்டுவந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
மருத்துவ அறிக்கை
மகேந்திரனின் உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சட்ட மருத்துவ அதிகாரியால் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மகேந்திரன் தாக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. மொட்டையான ஆயுதத்தால் அவர் (தடி) தாக்கப்பட்டு உடலில் கண்டல் காயங்கள் காணப்பட்டுள்ளன.
அதேநேரம் மகேந்திரனின் உயிரிழப்புக்கு இதயம் செயழிழந்தமையே காரணம் என்று தெரிகின்றது. அவர் ஏற்கனவே இதய நோய்க்கு உள்ளானவர் என்பதால் தாக்கப்பட்ட பின்னர் அவரது இதயம் செயழிழந்திருக்கலாம் என்று தெரிகின்றது.
ஆறுபேர் கைது
தற்போது சிறுமியின் தாய் உட்பட இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி பொ.மேனன் வழிகாட்டலில் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் சந்கேகநபர்களைக் கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மகேந்திரன் ஆடைகள் அற்ற நிலையில், நிலத்தில் காணப்பட்ட நிலையில், அது தொடர்பான தொடர்பான தகவல்களை அறிய முடியவில்லை.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில், சிறுமி இன்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று அறியமுடிகின்றது.