குருந்தூர்மலையில் காணி தரைவார்த்து பிறிதொரு இடத்தில் சிவன் ஆலயம்!

Yarl Naatham

குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபாடுகளை மேற்கொண்ட இடத்தில் நீதிமன்றக் கட்டளையை மீறி விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிறிதொரு இடத்தில் சிவன் ஆலயம் அமைப்பது என்று யாழ்ப்பாணத்தில் இன்று (ஓகஸ்ட் 17) கூடி முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.

குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகமும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தின் அருகே உள்ள நாகவிகாரையில் பௌத்த பிக்குகள், சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படும் சிலர், சில சைவக் குருமார்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

குருந்தூர்மலை விகாராதிபதி, தையிட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையின் விகாராதிபதி, நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள சமத்தி சுமன விகாரையின் விகாராதிபதி ஆகியோருடன், இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலபு சச்சிதானந்தன் மற்றும் சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவக் குருக்கள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இன்று நடந்த கலந்துரையாடல்
இன்று நடந்த கலந்துரையாடல்

முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர்கள், குருந்தூர்மலையில் சிவன்கோயில் கட்டுவது என்று இந்து – பௌத்த தலைவர்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர் என்று அறிவித்தனர்.

தங்களது பாரம்பரிய வழிபாட்டு இடத்தை மீளளிக்க வேண்டும் என்று பிரதேச மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர்களின் கருத்துக்களை உள்வாங்காது தன்னிச்சையாகச் சிலர் எடுத்துள்ள முடிவு மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இன்று நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அண்மையில், சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விகாரைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

வழிபாட்டுக்குச் சென்ற தமிழ் மக்கள் தடுத்து நிறுத்தப்படும் காட்சி.
வழிபாட்டுக்குச் சென்ற தமிழ் மக்கள் தடுத்து நிறுத்தப்படும் காட்சி.

அவர் வழிபாடுகளை மேற்கொள்வதற்குச் சில தினங்களுக்கு முன்னர், குருந்தூர்மலையில் பொங்கலிடச் சென்ற தமிழ் மக்கள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைரைச் சேர்ந்தவர்களால் தடுக்கப்பட்டதுடன், பொங்கல் பானைகள் கால்களால் தட்டப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

குருந்தூர் மலையில் தொல்லியல் பிரதேசத்துக்குள் நாங்கள் விகாரையோ அல்லது சிவன் கோவிலையே அமைக்கவில்லை. அது தொல்லியல் பிரதேசமாகவே இருக்கும்.

தொல்லியல் திணைக்களத்துக்கு அப்பால் இரு ஆலயங்களையும் அமைத்து வழிபடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் இறைமைக்கும் ஐக்கியத்திற்கும் முக்கியமான ஒன்றாகும்.

என்று இன்று கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆயினும் ஏற்கனவே நீதிமன்றக் கட்டளையைய மீறிக் கட்டப்பட்ட விகாரை தொடர்பில் அவர்கள் எதுவும் கூறவில்லை.

TAGGED:
Share This Article
Leave a comment
error: Content is protected !!