குருந்தூர்மலை பொங்கலுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு – பொலிஸாரின் காரணங்கள் நிராகரிப்பு!

Yarl Naatham
குருந்தூர்மலை வழிபாடு - கோப்புக் காட்சி

குருந்தூர்மலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் வழிபாட்டுக்குத் தடை விதிக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.

பொலிஸார் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், பொங்கல் வழிபாட்டைத் தடுக்க பௌத்த பிக்கு கல்கமுக சாந்த போதிக்கோ, அருண் சித்தார்த்துக்கோ எவ்வித அதிகாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டியது.

குருந்தூர்மலையில் நாளை (ஓகஸ்ட் 18) பொங்கல் வழிபாட்டை மேற்கொள்ள தமிழ் மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அதற்குத் தடை உத்தரவு வழங்கக் கோரி பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இன்று அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்

குருந்தூர்மலையில் நாளை பொங்கல் வழிபாடு இடம்பெற்றால் அது இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாட்டை ஏற்படலாம். உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக் கலவரமாக மாறி உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம்.

அமைவிடத்தின் அடிப்படையில் அங்கு கலவரத்தைத் தடுப்பது கடினமாகும் என்று தெரிவித்து குற்றவியல் நடைமுறைக் கோவை 106 (01) இன் கீழ் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து, நாளைய பொங்கல் வழிபாட்டுக்குத் தடை கோரியிருந்தனர்.

புராதனச் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தப் பிரதேச மக்கள் தங்கள் மத ரீதியான பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் ஒருவர் மத வழிபாட்டுக்கு மற்றொரு தரப்பு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மத வழிபாடுகளைத் தடுக்கத் தடைக் கட்டளை வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது.

பொங்கல் வழிபாட்டை விகாராதிபதி சாந்தபோதி தேரரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ அல்லது அருண் சித்தார்த் என்பவரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ தடுக்க எவ்விதமான அதிகாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

அதேநேரம், நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் வழிபாடு தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தால் அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொல்லியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள்
தொல்லியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள்

மறுபுறத்தில், குருந்தூர்மலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக சிங்கள மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்று பிவித்துரு ஹெல உறுமயக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், புத்தசாசனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சிங்களவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

TAGGED:
Share This Article
1 Comment
error: Content is protected !!