வலய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு வந்த மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கிப் பலி

Yarl Naatham
நீர் நிறைந்த குழியில் இருந்து மீட்கப்படும் மாணவர்கள்

வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டி வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் இன்று (ஓகஸ்ட் 18) நடத்தப்பட்ட நிலையில், அங்குள்ள நீர் நிறைந்த குழி ஒன்றில் வீழ்ந்து இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாணவர்களின் உடல்கள் குழியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அங்கு கூடியிருந்தவர்கள் வவுனியா பல்கலைக் கழகத் துணைவேந்தரைத் தாக்கவும் முயற்சித்துள்ளனர்.

வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் உள்ள வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று மெய்வல்லுநர் விளையாட்டுக்கள் நடைபெற்றன.

நீர் நிறைந்த குழியில் இருந்து மீட்கப்படும் மாணவர்கள்
நீர் நிறைந்த குழியில் இருந்து மீட்கப்படும் மாணவர்கள்

விளையாட்டுப் போட்டிக்கு வந்திருந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியால மாணவர்களில் இருவர், மைதானத்துக்கு அருகில் இருந்த நீர் நிறைந்த ஆழமான குழி ஒன்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளனர். அதை அவதானித்தவர்கள் அங்கு கடமையில் இருந்த ஆசிரியருக்குத் தெரியப்படுத்தினர்.

இது தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்துக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கு சென்று மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

சம்பவத்தை அடுத்து பதற்றமான நிலைமை காணப்பட்டது.
சம்பவத்தை அடுத்து பதற்றமான நிலைமை காணப்பட்டது.

அங்கிருந்து மீட்கப்பட்ட மாணவர்கள், வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், மருத்துவனையில் அனுமதிக்க முன்னரே மாணவர்கள் இருவரும் உயிரிழந்திருந்தனர். 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களே உயிரிழந்தவர்களாவர்.

இந்தச் சம்பவத்தை அறிந்த வவுனியா பல்கலைக் கழகத் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கு கூடியிருந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அங்கிருந்த பொலிஸார் அவருக்குப் பாதுகாப்பு வழங்கி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Share This Article
4 Comments
error: Content is protected !!