யாழில் சுடிதார் அணிந்து தாக்குதல் – பொலிஸாரிடம் சிக்கிய 9 பேர் – நடந்தது என்ன?

Yarl Naatham
சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருள்களுடன் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 9 பேர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, பெற்றோல் குண்டுத் தாக்குதல், வாகனங்களுக்குச் தீ வைத்தமை போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டில் இருந்த பொருள்களுக்கும் தீ வைத்திருந்தது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பெண்ககளின் சுடிதார் அணிந்து வந்து தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அபதிர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இன்று (ஓகஸ்ட் 18) 9 பேர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் பணம் பெற்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கனடாவில் உள்ள விஸ்வநாதன் என்பரிடம் இருந்து 2 லட்சம் ரூபா பணம் பெற்று கள்ளியங்காட்டில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் சந்தேகநபர்களுக்குத் தெரியவில்லை.

கீரிமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு சந்தேகநபர்கள் ஒரு லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளனர். திருநெல்வேலியில் உள்ள வீடொன்றுக்கு பெற்றோல் குண்டு வீச சந்தேகநபர்கள் ஒரு லட்சம் ரூபா பெற்றுக் கொண்டுள்ளனர்.

போதைக்கு அடிமையான சந்தேகநபர்கள் அதற்காகப் பணம் ஈட்டுவதற்காகவே இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 3 மோட்டார்சைக்கிள்கள், 2 வாள்கள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்திய பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் தாக்குதல் நடத்திய இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக் காட்சிகளும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பணம் கொடுத்தவர்களுக்கு அனுப்புவதற்காகவே அவர்கள் இந்த வீடியோக்களைப் பதிவு செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியபோது அணிந்திருந்த சுடிதார்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெண்களின் ஆடையை அணிந்தால் அடையாளம் காணமுடியாது என்று நம்பி சந்தேகநபர்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

TAGGED:
Share This Article
6 Comments
error: Content is protected !!