கள்ளனுக்கு பயந்து கட்டிவைத்த நகை குப்பையில் – மீட்டுக் கொடுத்த சுகாதாரத் தொழிலாளர்கள்!

Yarl Naatham
தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாது நகைகளைத் தேடிய சுகாதாரத் தொழிலாளர்கள்.

குப்பைகளுடன் தவறுவதலாக வீசப்பட்ட 8 பவுண் நகைகளை சாவகச்சேரி நகர சபை சுகாதார ஊழியர்கள் மீட்டு உரியவர்களிடம் சேர்ப்பித்துள்ளனர்.

சாவகச்சேரி, மண்டுவில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் ஒருவர் திருடர்களிடம் இருந்து நகைகளைக் காப்பாற்றுவதற்கு வித்தியாசமாகச் சிந்தித்து, வீட்டில் இருந்த நகைகளை ஒரு துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீட்டில் போட்டு விட்டிருக்கின்றார்.

ஆனால் அவரது போதாத நேரம், அண்மையில் வீட்டைச் சுத்தம் செய்தபோது, குப்பைகளோடு கலந்து அந்த நகைப் பொட்டலமும் வீதியில் கொட்டப்பட்டு விட்டது. இன்று (ஓகஸ்ட் 21) வழமையான கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட நகர சபை சுகாதார ஊழியர்கள் குப்பைககளை ஏற்றி தரம்பிரிக்கும் இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

அதன்பின்னரே வீட்டில் இருந்த நகைப் பொட்டலத்தைக் காணவில்லை என்று அறிந்த நபர் பதகளித்துப் போனார். பாதுகாப்புக் கமராப் பதிவுகளை ஆராய்ந்தபோதே, குப்பைகளோடு குப்பையாக நகைப் பொட்டலம் போன விடயம் அவருக்குத் தெரிந்திருக்கின்றது.

மீட்கப்பட்ட தங்க நகைகள்.
மீட்கப்பட்ட தங்க நகைகள்.

இது தொடர்பாக அவர் சாவகச்சேரி நகர சபைக்கு நேரில் சென்று, தலைமை நிர்வாக அதிகாரி செ.அனுசாவிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

உடனடியாகச் செயற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி செ.அனுசா, நகராட்சி மன்ற சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்களான பா.தயாகரன், பா.நிசாந்தன் ஆகியோருக்குத் தெரியப்படுத்தினார்.

நகராட்சி மன்ற கழிவு சேகரிக்கும் இடத்தில் இருந்து வெளியேறத் தடை ஏற்படுத்தப்பட்டு, சுகாதாரத் தொழிலாளர்களைக் கொண்டு அங்கு தேடுதல் நடத்தப்பட்டது.

நீண்டதேடுதலின் பின்னர் சுகாதாரத் தொழிலாளர் சண்முகம் தமிழ்சன் அந்த நகைப் பொட்டலத்தைக் கண்டுபிடித்தார். அது உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நகராட்சி மன்ற சுகாதாரப் பகுதியினரின் விரைவான செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

வீதியில் கழிவுகளைக் கொட்டாது, நகர சபையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று நகர சபை சுகாதாரப் பரிசோதகர் பி.தளிர்ராஜ் தெரிவித்தார்.

Share This Article
4 Comments
error: Content is protected !!