யாழ்ப்பாணத்தின் அதிகாலை வீடு புகுந்து கத்தியைக் காட்டி அச்சுறுத்திக் கொள்ளையடித்த கும்பல் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளது.
கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி அச்சுறுத்தி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் வழிகாட்டலில், யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்தது.
விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் பின் வீதியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. வீடுகளில் திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
சங்கிலியன் வீதியில் கத்தியைக் காட்டி கொள்ளையிட்டமை, கிளிஸ்தவ மதபோதகரை மிரட்டி கொள்ளையிட்டமை, பாற்பண்ணையில் உள்ள வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திக் கொள்ளையிட்டமை, இணுவிலில் வயோதிபர்கள் தனித்திருந்த வீட்டில் அச்சுறுத்திக் கொள்ளையிட்டமை போன்ற சம்பவங்களுடன் சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து சங்கிலியன் வீதியில் கொள்ளையடிக்கப்பட்ட 24 பவுண் நகைகளும், இணுவிலில் கொள்ளையிடப்பட்ட 4 பவுண் நகைகளும் மீட்கப்படடுள்ளன. அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளும், வாள் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் ஆலோசமைக்கு அமைய யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் விஷாந்தவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் குழு இந்தக் கைது நடவடிக்கைளை முன்னெடுத்தது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெரோலின் வழிகாட்டலில் யாழ்.மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையில் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப், கவியரசன், ஜெயந்தன், கரன், சுஜந்தன், ஜோசப், சம்பத் அறுகம், கொன்ஸ்டாபிள் இரந்திகா ஆகியோர் கொண்ட பொலிஸ் அணி விரைவாக சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளது.