சண்டிலிப்பாய், மாகியப்பிட்டியில் உள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி நகைகள், பணம் என்பவற்றையும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (ஓகஸ்ட் 29) அதிகாலை நடந்துள்ளது. கொள்ளையிடப்பட்டுள்ள வீடு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருடையது. வீட்டில் அவரும் மனைவியும் இருந்த குழந்தைகளுமே சம்பவநேரத்தில் இருந்துள்ளனர்.
குழந்தையின் கழுத்தில் கத்தி
வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முகமூடி அணிந்து முகங்களை மறைத்திருந்திருந்தனர். பிறந்து சிலமாதங்களேயான குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியே நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சிறு குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளன. அவ்வாறான கொள்ளைகளுடன் தொடர்புடைய நால்வர் நேற்று யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.