வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் இலங்கை முழுவதும் உள்ள அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருகின்றன என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர், ஏனைய வன்முறைச் சூழ்நிலைகள், பேரழிவுகள், மனிதாபிமான அவசர நிலைகள் மற்றும் இடம்பெயர்வு போன்றவற்றால் உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது தமது குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கின்றனர் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? அல்லது இறந்துவிட்டார்களா? என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு வேதனையும், நிச்சயமற்ற தன்மையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியமானது என்றும் செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பத்தை ஆதரிப்பவராக இருக்கின்ற நிலையில், அவர்கள் இல்லாதது குடும்பங்களின் பொருளாதார, சட்ட மற்றும் நிர்வாகச் சவால்களை அதிகரிக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் இருப்பிடம் தொடர்பாகக் கண்டறியும் முயற்சிகளுக்கு தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.