மெனிங்கோகோகல் (Meningococcal) பக்றீரியா தொற்றுக்குள்ளான ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தப் பக்ரீரியா தொற்று சமூகமயமாகியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் மெனிங்கோகோகல் பக்றீரியா (மூளைக்காய்ச்சல்) தொற்றுக்குள்ளாகி காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்திருந்தனர். சில கைதிகள் தொற்றுநிலைமையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அனைவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், இந்தப் பக்ரீரியா தொற்று சமூகமயமாவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சுகாதாரத் துறையினர் கூறியிருந்தனர்.
ஆனால் மெனிங்கோகோகல் பக்றீரியா தொற்றுடன் ஜா – எல பகுதியைச் சேர்ந்த ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். 48 வயதான இவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது இனங்காணப்பட்டுள்ள பக்ரீரியா தொற்றாளருக்கும், சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், கராப்பிட்டிய மருத்துவமனையில் உயிரிழந்த 8 மாத சிசு ஒன்றுக்கு மெனிங்கோகோகல் பக்ரீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
மெனிங்கோகோகல் பக்ரீரியா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்த சிசு உயிரிழந்துள்ள நிலையில், உடல் மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல், சளி, சோர்வு, வாந்தி அல்லது கைகள் மற்றும் கால்கள் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஓராண்டாக அரச மருத்துவனைகளில் மெனிங்கோகோகல் தடுப்பூசிகள் (Meningococcal Vaccine) கையிருப்பில் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் வெளிப்படுத்தியிருந்தார்.
88 தடுப்பூசிகள் வரையிலேயே கையிருப்பில் உள்ளன என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவற்றில் 6 தடுப்பூசிகள் அரச மருத்துவமனைகளிலும், மருத்துவப் பொருட்கள் பரிவில் 82 தடுப்பூசிகளும் உள்ளன என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மெனிங்கோகோகல் பக்ரீரியா தொற்று சமூகமயமானால் அதைக் கையாள்வதில் இலங்கை சுகாதாரத்துறை மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று சுகாதாரத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.