ஆசியக் கிண்ணத் தொடரின் இன்றைய (ஓகஸ்ட் 31) ஆட்டத்தில் பங்களாதேஸ் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது இலங்கை அணி.
பல்லேகல மைதானத்தில் நடந்த பகலிரவு ஆட்டத்தில் நாணயச் சுழற்றியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பங்களாதேஷ் எதிர்பார்த்தவாறு ஆட்டம் அமையவில்லை. இலங்கை பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தினார்கள். பங்களாதேஷ் வீரர்கள் வரிசையாக பவிலியன் திரும்ப, நஷ்முல் ஹொசைன் மட்டும் தனித்துப் போராடினார்.
122 பந்துகளில் 89 ஓட்டங்களைக் குவித்த நஷ்முல் ஹொசைன் தீக் ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் 20க்குக் குறைவான ஓட்டங்களையும் பெரும்பாலானவர்கள் ஒன்றை இலக்க ஓட்டங்களையுமே பெற்றனர்.
42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த பங்களாதேஷ் அணி 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அதில் 8 உதிரி ஓட்டங்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறினாலும் பின்னர் நிதானமாக வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது.
சதீர சமரவிக்ரமவும், சரித் அசலன்கவும் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை விரைவாக அதிகரிக்க உதவினர். சரித் அசலன்க 92 பந்துகளில் 62 ஓட்டங்களும், சதீர சமரவிக்ரம 77 பந்துகளில் 54 ஓட்டங்களும் இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாகப் பெற்றனர்.
39 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 5 இலக்குகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது. ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய மதீஷ பத்திரண தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 புள்ளிகளை எட்டியிருக்கின்றது.