எரிபொருள் கட்டணங்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாளை (செப்ரெம்பர் 2) முதல் நடைமுறைக்கு வரும்வகையில் பஸ் கட்டணத்தை 4 சதவீதத்தால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும், இந்த முன்மொழிவு போக்குவரத்து அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும் இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலைச் சிறுவர் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், கட்டணங்கள் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்தது.
கொள்கலன் போக்குவரத்துக் கட்டணமும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்று கொள்கலன் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.