News

யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்டவர் சிங்கப்பூர் ஜனாதிபதியானார்!

யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹிலிமாவின் 6 ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் 13ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவதற்கான தேர்தல் அங்கு நடைபெற்றது.

ஜனாதிபதித் தேர்தலில் 66 வயதான தர்மன் சண்முகரத்தினம், 76 வயதான இங் கொங் செங், 75 வயதான டான் கின் லியோன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இன்று (செப்ரெம்பர் 1) அங்கு தேர்தல் நடைபெற்றது. தர்மன் சண்முகரத்தினம் 70 வீத வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்றுத் தெரிவானார்.

தர்மன் சண்முகரத்தினம்

1957ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் யாழ்ப்பாணம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

தர்மனின் தந்தை கே.சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார். ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.

தர்மன் யப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

அரசியல் பயணம்

இவர் 2019ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சராகவும், 2015 முதல் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், 2011 முதல் சிங்கப்பூரின் நாணைய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

2011 முதல் 2019ஆம் ஆண்டுவரை துணைப் பிரதமராகவும், 2003 முதல் 2008ஆம் ஆண்டுவரை கல்வி அமைச்சராகவும், 2007 முதல் 2015ஆம் ஆண்டுவரை நிதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராக உள்ள இவர், 2001 முதல் தமா சுரோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஒரு பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றியுள்ளார்.

பல்வேறு உயர்மட்டப் பன்னாட்டுப் பேரவைகளுக்குத் தலைமை தாங்கி செயற்பட்டார். தர்மன் தற்போது முப்பது நாடுகள் அடங்கிய பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய பேரவையின் தலைவராக உள்ளார்.

ஐ.நா. தண்ணீரின் பொருளாதாரத்துக்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் பன்முகத்தன்மைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

Related Posts