யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக காணிப் பதிவாளர் அலுவலகத்தின் பணிகள் ஆளணிப் பற்றாக்குறையால் சேவைகள் தடைப்பட்டுள்ளன. காணிப் பதிவு ஒருநாள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
காணிப் பதிவாளர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறு அறிவித்தல்வரை துரிதசேவைகள் இடம்பெறாது என்று அறிவித்துள்ளார்.
காணிப் பதிவாளர் அலுவலகத்தில் இரு அலுவலக உதவியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். அதனால் துரிதசேவைகளைக் கொண்டு நடத்த முடியாதுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
துரிதசேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சாதாணர சேவைவயின் மூலம் காணிப் பதிவுகளைப் பெறற 20 நாட்களுக்கு மேலாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயத்தைக் கருத்தில் எடுத்து, துரித சேவையை ஆரம்பிக்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணிப் பதிவாளர் அலுவலகத்தில் முன்னர் 6 உத்தியோகத்தர்கள் இருந்துள்ளனர். வெளிமாகாணங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் அரசில் செல்வாக்கைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்த வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்படவில்லை. இதுவரை துரித சேவைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இரு உத்தியோகத்தர்களை மட்டும் கொண்டு கடும் நெருக்கடியின் மத்தியிலேயே அவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது அந்த இரு உத்தியோகத்தர்களில் ஒருவர் இதய நோய் காரணமாக மருத்துவ விடுமுறையில் உள்ளார்.