யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயில் இன்று (செப்ரெம்பர் 3) நடந்த விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விதியோர தொலைபேசிக் கம்பத்துடன் மோதியது. பண்டத்தரிப்பு, சில்லாலையைச் சேர்ந்த 20 வயதான ப.வசீகரன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திரும்புவதற்கான சமிக்ஞை போட்டுத் திரும்ப முற்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து சில்லாலை நோக்கிப் பயணித்த இளைஞன் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து வீதியோர தொலைபேசிக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானார் என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
விபத்தில் சிக்கிய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிள் முன்பகுதி முற்றாகச் சிதைவடைந்துள்ளது. இளைஞனின் உடல் தற்போது சங்கானை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக இளைஞனின் உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்படும் என்று சங்கானை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.