யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாகவே இந்தச் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின்போது ஏற்பட்ட தவறால் கையை அகற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
சிறுமிக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டபோது, கையில் பொருத்தப்பட்ட கனிலாவால் (Kanila) ஏற்பட்ட பாதிப்பே சிறுமியின் கையொன்றின் மணிக்கட்டின் கீழ் அகற்ற வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
“கனிலா பொருத்தப்பட்டபோது அல்லது மருந்து செலுத்தப்பட்டபோது, அருகில் இருந்த நாடி சேதமடைந்திருக்காலம் என்று சந்தேகிக்கப்படுகின்றது” என்று பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி யாழ்நாதத்ததுக்குத் தெரிவித்தார்.
“கையின் கீழ்ப் பகுதிக்கு இரத்தம் தடைப்பட்டு, கை செயழிழந்துள்ளது. அதனால் மணிக்கட்டின் கீழ் கையை அகற்ற வேண்டி ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையின் பணிப்பாளர் எமக்குத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவதானம் செலுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை அவர் கோரியுள்ளார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுநர் அலுவலகத் தரப்புக்கள் தெரிவித்தன.