பணமில்லாத வங்கிக் கணக்கின் காசோலையைக் கொடுத்து 72 லட்சம் ரூபாவைப் பெற்றவர் அந்தப் பணத்தை ஒரே வாரத்தில் செலவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் இருந்து மூன்று வார விடுமுறையில் வந்த ஒருவரிடம் உரும்பிராயைச் சேர்ந்த ஒருவர் காசோலையைப் பொறுப்புக் கொடுத்து 72 லட்சம் ரூபா பெற்றிருந்தார்.
அந்தக் காசோலையை வங்கியில் வைப்பிலிட்ட லண்டன் வாசிக்கு அதிர்ச்சியே எஞ்சியது. அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியதை அடுத்து, யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றப் பிரிவுப் பொலிஸாரிடம் அவர் முறைப்பாடு செய்தார்.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நேற்றுமுன்தினம் (செப்ரெம்பர் 1) உரும்பிராயைச் சேர்ந்த நபரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் பொலிஸாருக்கே தலைசுற்ற வைத்திருக்கின்றது.
காசோலையைப் பொறுப்புக் கொடுத்து வாங்கிய 72 லட்சம் ரூபா பணத்தை ஒரு வாரத்திலேயே செலவு செய்து முடிந்துள்ளார் அந்த நபர். இணைய வழி சூதாட்ட விளையாட்டிலேயே அனைத்துப் பணமும் பறிபோயிருக்கின்றது. வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் அனைத்து பணத்தையும் அந்த விளையாட்டில் விட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த நபர்.
கைது செய்யப்பட்டவர் நேற்று (செப்ரெம்பர் 2) நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 72 லட்சம் ரூபா பணத்தைக் கடனாகப் பெற்று, அதை இணையவழி சூதாட்டத்தில் செலவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
Hi colleagues, its wonderful piece of writing concerning teachingand fully defined, keep it up all the time.