யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் இடது கை மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட கனுலா (Cannula) தவறாகப் பொருத்தப்பட்டமையே மணிக்கட்டின் கீழ் கை செயலிழந்தமைக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றது.
சிறுமிக்கு காய்ச்சல்
காய்ச்சலுக்காக சிறுமி கடந்த 24ஆம் திகதி தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு 25ஆம் திகதியும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சந்தர்ப்பதில் சிறுமியின் வலது கையில் கனுலா (Cannula) பொருத்தப்பட்டிருந்தது என்கின்றனர் சிறுமியின் உறவினர்கள்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கிய குழந்தை மருத்துவ நிபுணரின் ஆலோசனைக்கு அமைய சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு, தனியார் மருத்துவமனையில் பொருத்தப்பட்ட கனுலா ஊடாகவே மருந்து செலுத்தப்பட்டது என்று சிறுமியுடன் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
புதிய கனுலா
மறுநாள் காலை சிறுமியின் இடது கையில் மணிக்கட்டுக்குப் பின்புறம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை விடுதியில் கடமையில் இருந்தவர்களால் கனுலா (Cannula) பொருத்தப்பட்டிருக்கின்றது.
கனுலா மருத்துவரால் பொருத்தப்படவில்லை என்றும் விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களால் பொருத்தப்பட்டது என்றும் சிறுமியின் தாய் கூறுகின்றார்.
மருந்து கனுலா ஊடாக நேரடியாகவே ஏற்றப்பட்டது என்றும், அதன்பின்னர் சிறுமி வலியால் அவதியுற்றபோது, அது தொடர்பாக விடுதியில் இருந்த தாதிய உத்தியோகத்தர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும், அவர்கள் அது தொடர்பாகக் கவனம் எடுக்கவில்லை என்றும் சிறுமியின் தாய் கூறியுள்ளார்.
அலட்சியம்
கடந்த 27ஆம் திகதி சிறுமியின் கடும் வலியால் அவதியுற்றிருக்கின்றார். அதன்பின்னர் அவரது கை வீக்கமடைந்திருக்கின்றது. அதன்பின்னர் கனுலா அகற்றப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டபோது கையில் குருதி ஓட்டம் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அதை வழமைக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை பயனளிக்காத நிலையில் நேற்றுமுன்தினம் 2ஆம் திகதி சிறுமியின் கை மணிக்கட்டுக்குள் கீழ் அகற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர், உறவினர்களால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சிறுமியின் கையில் தவறாகப் பொருத்தப்பட்ட கனுலாவே சிறுமியின் கை அகற்றப்படக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
சிறுமி வலியால் அவதியுற்றபோது, சுமார் 36 மணிநேரம் விடுதியில் இருந்தவர்கள் அது தொடர்பாக எந்த அக்கறையும் இன்றி இருந்தனர் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிறுமியின் தாத்தா சுப்பையா கனக நாயகம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது-
கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது மருத்துவர் சரவணபவனிடம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம். தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தோம்.
அங்கு இருந்த தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை (கனுலா) ஏற்றியபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. பின்னர் கை வீங்கியிருந்தது. அதுதொடர்பாக அங்கிருந்த தாதிக்குத் தெரியப்படுத்தியபோது அவர் கண்டுகொள்ளவில்லை.
அன்று இரவு 11 மணி அளவில் மருந்து ஏற்றும்போது மருந்து மற்றும் ரத்தம் வெளியில் வருகிறது என்று கூறியபோதுகூட அவர்கள் கவனம் செலுத்தவில்லை. மறுநாள் மருத்துவரிடம் கூறியபோது, அவர் பரிசோதித்து கை செயழிழந்து விட்டது என்றார். அதற்குரிய மருந்துகள் கொடுத்து பழைய நிலைமைக்குக் கொண்டுவருவோம் என்றார். ஆனால் இறுதியில் கை அகற்றப்பட்டது.
தற்போதும் எனது பேத்தி அவசர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார். அவர் நிலைமை பற்றி எதுவும் கூறுகிறார்கள் இல்லை.
எனது பேத்தியின் இந்த நிலைமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களே முழுக்காரணம். இவ்வாறான சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது. நாம் படும் வேதனை இனிமேல் எவருக்கும் ஏற்படக்கூடாது.
என்று கூறினார்.
விசாரணைகள்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றார். மருத்துவ நிபுணர்களான பிறேமகிருஸ்ணா மற்றும் அருள்மொழி ஆகியோர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுத்துள்ளார்.
தங்கள் பிள்ளையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஈடு செய்ய முடியாத இழப்பு
விசாரணைகள் நடந்தாலும், அறிக்கைகள் கிடைத்தாலும் சிறுமியின் கை மீண்டும் கிடைக்கப் போவதில்லை. சிறுமியின் வாழ்நாள் முழுவதும் அதன் தாக்கங்கள் இருக்கத்தான் போகின்றன. திடீரென ஏற்பட்ட இந்த இழப்பை சிறுமி ஏற்றுக்கொள்ளவே நீண்ட நாட்கள் தேவை. இவ்வாறான துயரங்கள் எதிர்காலத்தில் நடக்காதிருப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.
கடந்த காலங்களில் மருத்துவத் தவறுகளுக்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது, தவறுகள் மூடிமறைக்கப்பட்டமையே இப்போது நடந்த துயரத்துக்குக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. மருத்துவமனைகளில் காணப்படும் அலட்சியத்துக்கும், அவற்றால் ஏற்படும் இழப்புக்களுக்கும் எதற்கெடுத்தாலும் போர்க்கொடி தூக்கும் தொழிற்சங்கங்களும் ஒருவகையில் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.