ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய (செப்ரெம்பர் 5) ஆட்டத்தில் இலங்கை அணி “திரில்” வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்காகக் கடுமையாகப் போராடிய ஆப்கன் அணி 2 ஓட்டங்களால் வெற்றியை நழுவவிட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கிண்ண சுப்பர் 4 சுற்று இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. பெந்தும் நிசங்க, திமுத் கருணாரட்ன ஆகியோர் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தனர்.
திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களுடனும், பெந்தும் நிசங்க 41 ஆட்டங்களுடனும் ஆட்டமிழக்க சதீர சமரவிக்கிரம 3 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அணியின் நிலைமை சற்றுச் சிக்கலானது.
அதன்பின்னர் வந்த குசல் மெண்டிஸ், சரித் அசலங்க ஆகியோர் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். 4 ஆவது விக்கெட்டுக்காக அவர்கள் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர்.
சரித் அசலங்க 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, குசல் மெண்டிஸ் தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்து 33 ஓட்டங்களைப் பகிர்ந்தார். தனஞ்ச டி சில்வா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 84 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் குசல் மெண்டிஸ் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
அதன்பின்னர் இணைந்த துனித் வெல்லாகே, மதீஸ் தீக் ஷண ஆகியோர் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். 291 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கன் அணி 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஆனால் ரஹ்மத் ஷா மற்றும் ஹஷ்மதுல்லா ஷஹீதி ஆகியோர் 4 விக்கெட்டில் இணைப்பாட்டமாக 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்குத் தெம்பூட்டினர். அதன்பின்ன மொஹமத் நபி அதிவேக அரைச்சதம் குவித்து இலங்கை அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தார்.
மொஹமத் நபி 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஆட்டம் இலங்கையின் பக்கம் திரும்பியது. ஆனால் அதன்பின்னர் வந்த கரீம் ஜனத், நஜிபுல்லா ஸத்ரான், ராஷித் கான் ஆகியோரும் கைகொடுக்க ஆப்கன் வெற்றிக்கு அருகே வந்தது. ஆனால் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் சாதுரியத்தால் அவர்களின் கைகளுக்கு வெற்றி கிட்டாது போனது.
கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களையும், தனஞ்ச டி சில்வா 2 விக்கெட்டுக்களையும், துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இலங்கையால் நிர்ணயிக்கப்பட்ட 292 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 37.1 ஓவர்களில் அடைந்தால் ஆப்கனுக்கு சுப்பர் 4 வாய்ப்பு இருந்தது. அதேநேரம் 37.4 ஓவர்களில் ஆப்கன் அணி 295 ஓட்டங்களை எடுத்தாலும் ஆப்கனுக்கு சுப்பர் 4 வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆப்கனின் இறுதி ஆட்டக்காரர் பஸால்ஹக் பாறூக்கியும், அந்த அணியின் முக்கியமான வீரர் ராஷித் கானும் அதை அறியாது பந்துக்களை தவற விட்டனர். ஆப்கனின் சுப்பர் 4 ஆசையும் தவறவிடப்பட்டது.