முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் இன்று (செப்ரெம்பர் 6) மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் பெரும் மனிதப் புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த அகழ்வு நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இறுதிப்போரின்போதும் அதன் பின்னரும் பல தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் இந்தப் புதைகுழி அகழ்வை திகிலுடனே அவதானித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை மேற்கொண்ட குழாய் பொருத்துவதற்கான அகழ்வு நடவடிக்கைகளில் மனித எலும்பு எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 6ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு நடவடிக்கைகளில் 13 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றில் நடந்த கலந்துரையாடல்களின் பின்னர் அகழ்வுப் பணிகள் செப்ரெம்பர் 5, அதாவது நேற்று முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு நடவடிக்கைகள் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு, இன்று காலை அகழ்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டன.
முன்னர் அகழப்பட்ட இடத்தில் இருந்த மண் வெளியே எடுக்கப்பட்டு அந்தப் பகுதி சுத்தமாக்கப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தால் அந்த இடத்தில் அளவீடுககள் மேற்பட்டன. அத்துடன் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடம் அடையாளமிடப்பட்டு, பாதுகாப்புக் கொட்டகையும் அமைக்கப்பட்டது.
இந்த அகழ்வு நடவடிக்கைகள் நாளையும் தொடரும் என்று முல்லைத்தீவு மாவட்டச் சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா தெரிவித்தார்.
அதேவேளை, இந்தப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் சர்வதேசத்தின் நேரடிக் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதை வலியுறுத்தி ஜூலை மாதம் 28ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இறுதிப்போரின்போது இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட பலரின் நிலைமை இன்றுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், கொக்குத்தொடுவாயில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்த இடத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.