முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் இன்று (செப்ரெம்பர் 7) பெண்களின் உள்ளாடை மற்றும், இரு துப்பாக்கிச் சன்னங்கள், மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாயில் இரண்டாவது நாளாக இன்று அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சேமதேவ தலைமையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் நாள் அகழ்வில் இரு மனித உடல் எலும்பு எச்சங்கள் பகுதியளவில் கண்டுபிடிக்கப்பட்டன. இரு துப்பாக்கிச் சன்னங்கள், துப்பாக்கிச் சன்னம் துளைத்த ஆடைகள் எனப் பல தடயப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை எடுக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் தென்படவில்லை என்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசுதேவா தெரிவித்தார்.
ஆனால் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் மீது துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளங்கள் காணப்படுகின்றன என்று அவர் கூறினார். பகுப்பாய்வின் பின்னரே முழுமையான தகவல் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை மேற்கொண்ட குழாய் பொருத்துவதற்கான அகழ்வு நடவடிக்கைகளில் மனித எலும்பு எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 6ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு நடவடிக்கைகளில் 13 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றில் நடந்த கலந்துரையாடல்களின் பின்னர் அகழ்வுப் பணிகள் செப்ரெம்பர் 5, அதாவது நேற்று முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு நடவடிக்கைகள் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு, நேற்றுக் காலை அகழ்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்றும் அகழ்வுகள் நடத்தப்பட்டன.