சிறுமியின் கை அகற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் – மூடி மறைக்க முயற்சியா?

Yarl Naatham
பாதிக்கப்பட்ட சிறுமி

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். மேலும் நால்வரிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலம் பெறப்பட்டவர்களில் பணிப்பாளரும், சிறுமி சிகிச்சை பெற்ற விடுதியில் கடமையில் இருந்தவர்களும் உள்ளடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பின்னணி

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.
சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட கனுலா தவறாக பொருத்தப்பட்டமையால் சிறுமியின் கையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கையைத் துண்டிக்க வேண்டி ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Kanila - கோப்புப்படம்
Kanila – கோப்புப்படம்

விசாரணைகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

அதற்குச் சமாந்தரமாக பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதுவரை மருத்துவமனைப் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் பொலிஸாரால் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் 4 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணைகள் இன்னமும் நிறைவடையவில்லை. மூன்று நாள்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், விசாரணைக்கு இன்னமும் இரு நாள்கள் தேவை என்றும் மருத்துவமனைத் தரப்புக்களிடம் அறியமுடிந்தது.

சிக்கல் நிலைமை

விடுதியில் கடமையில் இருந்தவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளபோதும், அவற்றின் மூலம் எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியாதுள்ளது என்றும், காரணங்களே கூறப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தரப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. பொலிஸ் உள்ளகத் தரப்புத் தகவல்களின்படி அவர்களின் வாக்குமூலங்கள் மழுப்பலாக ஒருவரை ஒருவர் காப்பாற்றும் வகையிலேயே இருக்கின்றன என்றும் தெரியவருகின்றது.

அத்துடன், விடுதியில் கடமையிலிருந்த அனைவரது வாக்குமூலங்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன என்று பொலிஸ் தரப்புக்களில் இருந்து அறியமுடிந்தாலும், அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

மருத்துவம் சார்ந்த தவறை மருத்துவத் துறையினரே இனங்கான முடியும் என்ற நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணை அறிக்கை கிடைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என்ற நிலைமையிலேயே பொலிஸ் தரப்பு உள்ளது. ஆயினும் இன்னமும் மருத்துவமனை விசாரணைக்குழுவின் விசாரணை முழுமைப்படுத்தப்படவில்லை.

அதேநேரம் அண்மைக் காலங்களில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவமனைகளில் மருத்துவத் தவறுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. அவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தபோதும், விசாரணை அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

யாழ். போதனா மருத்துவமனை
யாழ். போதனா மருத்துவமனை

பாதிக்கப்பட்டோர் கருத்து

விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக் கோரிக்கையாக உள்ளது. விசாரணைகளைக் காலம் தாழ்த்தி இழுத்தடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமிக்கு நடந்த சம்பவம் கண் முன்னே நடந்தது என்ற நிலையில், எவரும் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விசாரணைகள் நீதியான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வழக்கு இன்று

சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. சிறுமியின் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவக் குறிப்பேடு மற்றும் விசாரணை அறிக்கையை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a comment
error: Content is protected !!