தற்போது உதவித் திட்டப் பதிவுகளுக்காக மக்கள் அலைந்து திரிவதைப் பயன்படுத்தி வயோதிபர்களிடம் தன் வித்தையைக் காட்டித் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மக்கள் சமுர்த்தி, அஸ்வெசும என்று உதவித் திட்டப் பதிவுகளுக்கு அலைந்து திரிகின்றனர். அதை ஒருவர் பயன்படுத்தி யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதிகளில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது வித்தையை வயோதிபர்களிடம் மட்டுமே காட்டியுள்ளார்.
சரியான ஆளை இனங்கண்டு பேச்சுக் கொடுக்கும் அந்த நபர் தன்னை சமுர்த்தி உத்தியோகத்தர் என்றோ, கிராம அலுவலரின் உதவியாளர் என்றோ சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்திக் கொள்வார். அப்படியே பேச்சுக் கொடுத்து, உதவித் திட்டத்துக்கான பதிவுகள் நடக்கின்றன என்று வயோதிபர்களை அழைத்துச் செல்வார்.
ஆள்களற்ற இடம் வந்ததுமே அவர் தனது சுயரூபத்தைக் காட்டி வயோதிபர்களை அச்சுறுத்தி அவர்களிடம் உள்ள நகை அல்லது பணத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டு தப்பிச் செல்வார். இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி கேவா வசந்த தலைமையிலான பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரை இன்று (செப்ரெம்பர் 6) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டரிடம் இருந்து 10 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள “ரெண்டிங்” பார்த்து வித்தையைக் காட்டியவர் தற்போது கம்பி எண்ணுகின்றார்.
46 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்று யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.