பாடசாலைச் சிறுவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளைக் கொடுத்து அவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் கும்பல் ஒன்று நேற்று (செப்ரெம்பர் 7) கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் என்றும் ஏனையோர் ஆண்கள் என்றும் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாகப் பணியாற்றுகின்றார். இவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்.
அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் ஜஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட ஆண்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் ரோல்கோட் நகைகளை விற்கும் கடை வைத்திருக்கும் முஸ்லிம் நபராவார். இவரே ஐஸ் போதைப் பொருளைப் பெண்ணுக்கு விநியோகித்துள்ளார். ஐஸ் போதைக்கு பெண்ணை அடிமையாக்கி, தங்கள் தேவைக்கு இந்தக் கும்பல் பயன்படுத்தியுள்ளது.
இளைஞர்கள், சிறுவர்கள், மாணவர்களுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் விற்பனையை அதிகரிப்பதற்குத் திட்டமிட்ட இந்தக் கும்பல், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர்களுக்குத் தெரியாது வேறு பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருளைக் கலந்து கொடுத்து அவர்களை அதற்கு அடிமையாக்கும் கொடூரச் செயலை இந்தக் கும்பல் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் குழு இந்தச் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.