North

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி – பெண் போராளிகள் இருவரின் எலும்பு எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்தில் இன்று (செப்ரெம்பர் 8) மூன்றாம் நாளாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று இனங்காணப்பட்ட இரு மனித எலும்பு எச்சங்கள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. இந்த அகழ்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் நடைபெற்றது.

இன்று இரு உடல்களின் எலும்பு எச்சங்களும், ஆடைகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் உறுப்பினர்களுடையவை என்று நம்பப்படுகின்றது.

பச்சை நிற ஆடைகளும், பெண்களின் உள்ளாடைகளும் மீட்கப்பட்டுள்ளன. பச்சை நிற நீளக் காற்சட்டைகளிலும், உள்ளாடைகளிலும் இலக்கங்கள் இடப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது. அதேநேரம், ஆடைகள் துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து நேற்று இரு துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டிருந்தன.

முதலாவது மனித எலும்பு எச்சத்துடன் மீட்கப்பட்ட முழுநீள காற்சட்டையில் 3204 என்ற இலக்கமும், உள்ளாடை ஒன்றில் 3147 என்ற இலக்கமும் காணப்பட்டுள்ளது. இரண்டாவது மனித எலும்பு எச்சத்துடன் மீட்கப்பட்ட உள்ளாடையில் 1564 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித உடல் எச்சங்களும், தடயப் பொருள்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் உடல்கள் – பெண்கள் ஆடைகளும் மீட்பு!

Related Posts