க.பொ.த. உயர்தரப் பரீட்சை போலி பெறுப்பேற்றுச் சான்றிதழைச் சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகக் கடமையாற்றிய ஒருவர் யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்குப் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் சேவை பதவிநிலை உயர்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டபோதே, சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணநிரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு சந்தேகநபரைக் கைது செய்துள்ளது.
சந்தேகநபர் முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவர் இராணுவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் சில வருடங்கள் கடமையாற்றிய பின்னர், மாகாணக் கல்வி அமைச்சால் தொண்டர் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இல் உள்ளீர்க்கும்போது இவருக்கும் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆசியராக் கடமையாற்றிச் சம்பளம் பெற்றுள்ள நிலையில், பதவிநிலை உயர்வுக்காகக் கல்வித்தகைமை ஆவணங்களைளச் சமர்ப்பித்துள்ளார்.
அவரது க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் சான்றிதழ்கள் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அங்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சைச் சான்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிட்பட்டு, இது தொடர்பான விசாரணை பொலிஸ் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் சிறப்புக் குற்ற விசாரணைப் பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இரு அமர்வுகளிலும் சித்தியடையவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.