வடக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொரோக்கோவில் ஏற்பட்ட நிலஅதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ரிக்ச்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவான இந்த நில அதிர்வால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி 23.11 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு, 19 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் 4.9 ரிக்சடர் நில அதிர்வு ஏற்பட்டது.
மரக்கேஷ் மற்றும் தெற்கில் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலஅதிர்வில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அட்லஸ் மலைத்தொடரில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு செல்வதில் பெரும் சிரமம் உள்ளது என்று மீட்புப் பிரிவினர் தெரிவித்தனர். முக்கியமாக பழைய கட்டடங்களால் ஆன கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்ல சில நாட்கள் ஆகலாம்.
மொரோக்கோ கடற்கரையில் உள்ள கேனரி தீவுகள் மற்றும் அதன் கிழக்கு அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள மக்களும் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.