இலங்கை தபால் திணைக்களத்தின் இணையத்தளம் போன்ற போலி இணையத்தளத்தைப் பயன்படுத்தி பெருந்தொகைப் பண மோசடிகள் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கைத் தபால் திணைக்களம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு பணப்பரிவர்த்தனையும் மேற்கொள்ளவதில்லை என்று தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.குமார தெரிவித்தார்.
பொதிகள் வந்திருப்பதாகத் தெரிவித்து வங்கி அட்டைகள் தொடர்பான தகவல்களைப் பெற்று பணமோசடி செய்வது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையிலேயே தபால்மா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் இணையத்தளம் போன்ற போலி இணையத்தளம் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் மக்களின் வங்கி அட்டைகளின் விவரங்களைப் பெற்று இந்த மோசடி நடத்தப்படுகின்றது என்று அறியமுடிகின்றது.
கைபேசிகளுக்கு வரும் தகவலை நம்பி, வங்கி அட்டை விவரங்களை பதிவிடுவோரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் களவாடப்படுகின்றது. கைபேசிகளுக்கு வரும் குறுந்தகல்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திலும் பலருக்கு இவ்வாறான குறுந்தகவல்கள் கைபேசிகளுக்கு வருவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை நம்பி வங்கி அட்டை விவரங்களைப் பதிவிட வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.