சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்தத் திருவிழாவின் சப்பறத் திருவிழாவான இன்று (செப்ரெம்பர் 12) மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட 8 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.
நல்லூர் கந்தன் ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருகின்றது. சப்பறத் திருவிழாவான இன்று ஆலயத்துக்குப் பல்லாயிரக்கணக்கான பந்தர்கள் முருக தரிசனத்துக்காக வந்திருந்தனர்.
நல்லூர் ஆலயத்தைச் சூழவும் ஆலயத்தால் தடுப்புக்கள் அமைக்கப்பட்டு மறைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் ஆலய வீதிக்குள் நுழைவதற்கு அங்காங்கு பாதைகள் விடப்பட்டுள்ளன.
இன்று ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கூடிய நிலையில், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர் என்று திருவிழாவுக்குச் சென்றவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதுடன் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை வீதி மூடப்பட்டு, மக்கள் பாவனைக்கு சிவன் கோவில் பாதை மட்டும் விடப்பட்டமையே இதற்குப் பிரதான காரணம் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளை காலை தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பெரும் திரளான பக்தர்கள் ஒன்றுகூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை நெரிசலைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உரிய தரப்புக்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நெரிசலைப் பயன்படுத்தி பலரின் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. திருட்டில் ஈடுபட்ட ஒருவர் பிடிக்கப்பட்டு, அவரிடம் இருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.