யாழ்ப்பாணம், பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரும், பேர்த்தியாரும் தங்கியிருந்த நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பேர்த்தி ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் இன்று (செப்ரெம்பர் 12) நடந்துள்ளது. நஞ்சருந்திய பேர்த்தி சிறுமிக்கும் நஞ்சூட்டியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியும், பேர்த்தியும் தங்கியிருந்த அறையில் இருந்து கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என்று அறியமுடிந்தது. திருகோணமலையில் இருந்தே இவர்கள் வந்துள்ளனர்.
சிறுமியின் தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து மறுமணம் செய்துள்ள நிலையில், சிறுமி பேர்த்தியின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார். ஆயினும் அவர்களின் குடும்பத்திடையே தொடர்ந்து முரண்பாடுகள் காணப்பட்டன என்று கூறப்படுகின்றது.
முரண்பாடுகளின் தொடர்ச்சியாக சிறுமியைத் தன்னால் இனிமேலும் வளர்க்க முடியாது என்று கருதி பேர்த்தி இந்தத் தவறான முடிவை எடுத்துள்ளார் என்று விசாரணைகளின் அடிப்படையில் ஊகிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.