யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. விசாரணைகள் இன்னமும் முடிவடையாத நிலையில், விசாரணைகளுக்கு இன்னமும் 10 நாள்கள் தேவை என்று நேற்றைய வழக்கு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கை அகற்றப்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறியவும் நீதிமன்று உத்தரவிட்டது. சிறுமியின் கை பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையில் பொலிஸார் ஊடாகக் கையளிக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கையை முழுமைப்படுத்திச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டது.
சிறுமியின் சார்பாக சட்டத்ததரணிகளான சர்மினி விக்னேஸ்ரன் மற்றும் லக்சன் செல்வராஜா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
பின்னணி
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.
சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட கனுலா தவறாக பொருத்தப்பட்டமையால் சிறுமியின் கையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கையைத் துண்டிக்க வேண்டி ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் அந்த விடுதியில் கடமையில் இருந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன. அங்கு கடமையில் இருந்த தாதி ஒருவருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று கடந்த வழக்குத் தவணையின்போது பயணத் தடை விதித்திருந்தது.