முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கையில் இன்று (செப்ரெம்பர் 14) 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ரவை ஒன்றும் தடயப் பொருளாதாக மீட்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாயில் இனங்காணப்பட்ட இடத்தில் கடந்த 6ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று எட்டாவது நாளாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்று நடந்த அகழ்வு நடவடிக்கையில் மீட்கப்பட்ட ஆடையொன்றில் இ-1124 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உடை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தியது என்று தெரிகின்றது.
அகழ்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.
அகழ்வுப் பணிகள் நாளையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.