யாழ்ப்பாணம், பரமேஸ்வரா சந்தியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து 12 வயதுச் சிறுமி நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியின் அம்மம்மா சிறுமிக்கு அதிகளவு மருந்து வழங்கிக் கொன்றுள்ளமை தெரியவந்துள்ளது. இன்று (செப்ரெம்பர் 13) அவர் பொலிஸாருக்கு மருத்துவமனையில் வைத்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம், பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் அறையில் இருந்து 12 வயதுச் சிறுமி பாத்திமா ஹிமா சடலமாக மீட்கப்பட்டார். அவரது பேர்த்தியாரான 53 வயதான நாகபூசணி சிவநாதனும் அந்த அறைலிருந்து அசாதாரண நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நாகபூசணி மன்னாரைச் சேர்ந்தவர். நாகபூசணியின் மகள் முஸ்லிம் நபரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்குப் பிறந்தவளே பாத்திமா ஹிமா.
பாத்திமா ஹிமாவின் தாயும், தந்தையும் முரண்பாட்டால் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் தாய் பிறிதொரு திருணம் செய்துவிட்டார். தந்தையும் திருகோணமலையில் வேறு திருணம் செய்துவிட்டார்.
பாத்திமா ஹிமாவை 2 வயது முதல் பேர்த்தியாரான நாகபூசணியே வளர்த்து வந்திருக்கின்றார். திடீரென சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா ஹிமாவின் தந்தை மகளைத் தான் வளர்க்கின்றேன் என்று கூறித் திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
சிறுவயதில் இருந்து பாத்திமா ஹிமாவை வளர்த்த நாகபூசணி இந்தப் பிரிவால் பாதிக்கப்பட்டார். தனது பேத்தியின் எதிர்கால வாழ்வு எவ்வாறு இருக்குமோ என்ற பயம் அவரைத் துரத்தியிருக்கின்றது. அது அவரை ஆபத்தான முடிவை நோக்கித் தள்ளியிருக்கின்றது.
கடந்த 2ஆம் திகதி திருகோணமலைக்குச் சென்ற நாகபூசணி, பாத்திமா ஹிமாவின் தந்தையிடம் மன்றாடிச் சிறுமியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்திருக்கின்றார். சிறுமியை மருத்துவர்களிடம் காட்டிச் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று அங்கு காரணம் கூறியிருக்கின்றார்.
கடந்த 9ஆம் யாழ்ப்பாணம் வந்த அவர்கள் பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். சிறுமியின் உளநலச் சிகிச்சைக்காக இங்கு வந்தோம் என்றும், அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளது என்றும் விடுதியில் தெரிவித்திருக்கின்றார் நாகபூசணி.
அங்கு வந்த மறுநாள் நாகபூசணி மட்டும் வெளியே சென்று வந்திருக்கின்றார். அதன்பின்னர் அவர்கள் வெளியே வரவில்லை.
நேற்று அறையில் இருந்து சிறிது துர்நாற்றம் கிளம்பியிருக்கின்றது. விடுதிப் பணியாளர்கள் கதவைத் தட்டியபோது பதில் கிடைக்கவில்லை. அறையின் ஒரு பகுதியில் உடைத்து உள்ளே பார்த்தபோது, படுக்கையில் இருவரும் அசைவற்றிருப்பதைப் பணியாளர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
கோப்பாய் பொலிஸார் சம்பவ இடததுக்கு வந்து அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தார். அவரது உடல் பழுதடைந்திருந்தது. நாகபூசணி அசாதாரண நிலையில் காணப்பட்டார். அவரது உடலில் அசைவுகள் தென்பட்டதை அடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை தேறியுள்ளது. தற்போது அவர் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெறுகின்றார்.
சிறுமியின் உடல் உடல்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான மருந்தொன்று சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
மருத்துவ மாதாக (Midwife) பணியாற்றிய அனுபவம் நாகபூசணிக்கு உண்டு. விடுதியில் இருந்து வெளியே சென்ற அவர், மருந்தகங்களில் தூக்க மாத்திரைகளையும், தனக்குத் தெரிந்த மருந்துகளையும் வாங்கியுள்ளார். அவற்றில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஊசி மூலம் ஏற்றும் மருந்தும் அடங்கியிருந்துள்ளது.
சிறுமிக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, ஆபத்தான மருந்தையும் செலுது்திய பின்னர், தானும் தூக்க மாத்திரைகளை அருந்தி, தனக்கும் மருந்தைச் செலுத்தியிருக்கின்றார் நாகபூசணி.
தனது பேர்த்தியின் எதிர்காலம் எவ்வாறு இருக்குமோ என்ற அச்சத்தில் – பேர்த்தியின் மீதான பாசத்தில் தவறான முடிவை எடுத்திருக்கிறார் நாகபூசணி. நாகபூசணி உயிர்தப்பியபோதும், துரதிஷ்டவசமாக பாத்திமா ஹிமாவின் உயிர் பிரிந்தது. தற்போது நாகபூசணி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம்.