17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்!

Yarl Naatham

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் இதுவரை 17 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என இனங்காணப்பட்ட இடத்தில் கடந்த வாரம் (செப்ரெம்பர் 6) புதன்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து தினமும் அங்கிருந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டு வந்ததுடன், தடயப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன.

துப்பாக்கி ரவைகள், உடைகள், சயனைட் குப்பி, நீர்சுத்திகரிப்புக் கருவி என்பன அங்கிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன், மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இன்று (செப்ரெம்பர் 15) ஒன்பதாகவது நாளாக அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன் முன்னிலையில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தொல்லியல் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாணம் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன் மற்றும் ரணித்தா ஞானராசா, தடயவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரசன்னத்துடன் இந்த அகழ்வுகள் நடைபெற்றன.

அகழ்வுப் பணிகள் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

இன்றைய அகழ்வு நடவடிக்கைகளின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, இதுவரை 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்த ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளுக்குச் செல்ல இருப்பதாலேயே அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும், ஒக்ரோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படலாம் என்றும் அவர குறிப்பிட்டார்.

Share This Article
error: Content is protected !!