இந்தியாவிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்மானது.
நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியலும், தாயகத்தின் பல இடங்களிலும் இன்று நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி இந்தியாவிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் முன்றலில் தனது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அந்தக் காலகட்டத்தில் தமிழர் பிரதேசங்களில் இந்திய அமைதிப் படை நிலைகொண்டிருந்த சமயத்திலேயே திலீபனின் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்மாகியிருந்தது.
- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கோரிக்கைகளை இந்தியாவால் புறக்கணிக்கப்பட்டது.
நீராகாரம் கூட அருந்தாது உணவு தவிர்ப்பைத் தொடர்ந்த திலீபன் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி தன்னுயிரை மக்களுக்காக நீத்தார்.