யாழ்ப்பாணம், தாவடியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (செப்ரெம்பர் 16) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் வீட்டிலிருந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிறுமி ஒருவரும், இன்னொரு பெண்ணும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டு எல்லைக்குள் புகுந்த கும்பல் பெற்றோல் குண்டுகளை வீசியதுடன், வீட்டில் நிறுது்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் அங்கிருந்த உடைகளை அடித்து நெருக்கியது.
பெற்றோல் குண்டுத் தாக்குதலால் வீடு தீப்பற்றியதை அடுத்து வீட்டிலிருந்தவர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த வீட்டில் வசிக்கும் சுமார் 19 வயதுப் பெண் மீது ஒருதலையாகக் காதலித்த நபர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த இந்த நபர், பெண் கேட்டார் என்றும் அதற்கு யுவதியின் குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்திருந்தனர் என்றும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், அந்த நபர் தொலைபேசி மூலம் நேற்று அச்சுறுத்தல் விடுத்தார் என்றும், வன்முறைக் கும்பலை அனுப்பித் தாக்குதல் நடத்துவேன் என்று கூறினார் என்றும் தெரியவருகின்றது.
இந்தத் தாக்குதலில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரும், இளம் பெண் ஒருவரும் படுகாயமடை அடைந்துள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.