யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி மூலம் மூவர் சரணடைந்துள்ளனர்.
நேற்று அதிகாலை தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாதவர்கள் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசித் தாக்கியதுடன், அங்கிருந்த வாகனம் மற்றும் பொருட்களைத் தாக்கிச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் வீட்டிலிருந்த தந்தை, தாய், மகன் மற்றும் இரு மகள்கள் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரு தலைக் காதல் காரணமாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக ஒருதலையாகக் காதலித்த நபர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்தார் என்று பாதிக்கப்பட்டவர்களின் முறை்பபாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொலிஸார் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், ஒருதலையாகக் காதலித்தார் என்று கூறப்படும் இளைஞர் உட்பட மூவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஊடாக நேற்று சரணடைந்துள்ளனர்.
அதேவேளை, வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த எவரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.