அவுஸ்திரேலியா செல்லும் ஆசையால் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 75 லட்சம் ரூபாவை இழந்துள்ளார்.
ஆசிரியரிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்தவர் தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியா செல்ல ஆசைப்பட்டு பத்திரிகைகளில் வெளியான விளம்பரம் ஒன்றைப் பார்த்து அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்கள் தங்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர் நிறுவனம் என்றும், கொழும்பில் இருந்து இயங்குகின்றேம் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புகின்றோம் என்ற அவர்களின் பேச்சை நம்பி ஆசிரியரும் கட்டம் கட்டமாக பணத்தை வைப்பிலிட்டுள்ளார். 75 லட்சம் ரூபாவை வைப்பிலிட்டபோதும், ஆசிரியர் அவுஸ்திரேலியா சென்றபாடில்லை..
நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டதை அடுத்து ஆசிரியர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடு செய்தார். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
விசாரணைகளின் அடிப்படையில் கொழுப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்தது.
கைது செய்யப்பட்டவரிடம் மேலும் பலர் ஏமாந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. சிலர் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அவை தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலும், வடக்கின் ஏனைய இடங்களிலும் அண்மைக்காலமாக வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கனடா அனுப்புவதாகக் கூறியும் பல மோசடிகள் நடப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.