North

திலீபனின் நினைவு ஊர்திக்குத் தடை கோரிய பொலிஸார் – பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிமன்று!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய நினைவு ஊர்தி வவுனியாவில் பயணிப்பதற்குத் தடை விதிக்கக்கோரி வவுனியா பொலிஸார் வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அதை நிராகரித்த நீதிமன்றம் நினைவு ஊர்திப் பவனிக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

நினைவு ஊர்தி வவுனியாவில் பயணித்தால் பொது அமைதிக்குப் பக்கம் ஏற்படும் என்றும், இன நல்லுறவு சீர்குலையும் என்றும் இருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய ஊர்திப் பவனிக்குத் தடை விதிக்கக்கோரி வவுனியா பொலிஸார் வவுனியா நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (செப்ரெம்பர் 18) வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

குழப்பங்கள் ஏற்படாத வகையில் ஊர்திப் பவனிக்குப் பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

அதேவேளை, திருகோணமலையில் நேற்று இந்த ஊர்தி பயணித்தபோது காடையர் குழு ஒன்று இந்த ஊர்தி மீது தாக்குதல் நடத்திச் சேதம் விளைவித்திருந்தது.

அந்த ஊர்தியுடன் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும், சட்டத்தரணி காண்டீபன் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தது.

அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்திருந்த பொலிஸ் திணைக்களம், தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

Related Posts