க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். மிக விரைவில் அது தொடர்பாக அறிவித்தல் ஒன்றை அவர் விடுப்பார் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த.
நாடாளுமன்றத்தில் நேற்று (செப்ரெம்பர் 18) எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பரீட்சை கால அட்டவணையில் சீரமைப்புக்களைக் கொண்டுவர வேண்டும். பிள்ளைகளின் உரிமைகள் இல்லாது போய்விடக்கூடாது. வடக்கு, கிழக்கு உட்பட கஸ்ட பிரதேச பாடசாலைகளில் இன்னமும் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.
2023ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இரண்டரை வருடம் உயர்தரத்தில் கற்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. நவம்பர் மாதம் பரீட்சையை நடத்தத் தீர்மானிக்கும்போது ஆசிரியர்கள் குறுகிய காலத்தில் பாடத்திட்டங்களை முடிக்க முயற்சிப்பர். இதனால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.
இரண்டாவது தடவையாகப் பரீட்சைக்குத் தேற்றும் மாணவர்களுக்கும், பாடப் பிரிவுகளை மாற்றும் மாணவர்களுக்கும் பரீட்சைக்குத் தயாராகப் போதுமான காலம் இல்லை.
உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்தாது, பாடசாலை மூன்றாம் தவணைக் காலத்தை ஜனவரி மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவு செய்து, உயர்தரப் பரீட்சையை ஜனவரி 22ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதிவரை நடத்த முடியும். பெப்ரவரி 19ஆம் திகதி பாடசாலை முதலாம் தவணையை ஆரம்பிக்க முடியும். மே மாதம் பெறுபேற்றை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு செய்தால் அடுத்த ஆண்டுக்கான பரீட்சையை ஒக்ரோபர் மாதம் நடத்தலாம். அதனால் உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
இந்த யோசனைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அவர் விரைவில் அறிவித்தல் ஒன்றை விடுப்பார் என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.