தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை கோரி பொலிஸார் இரண்டாவது தடவையாக தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று (செப்ரெம்பர் 22) தள்ளுபடி செய்தது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணைகள் கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றன. மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.ஆனந்தராஜா பொலிஸாரால் போதுமான காரணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் நேற்றுக் கொழும்பில் இருந்து உலங்குவானூர்தியில் வந்த சட்டமா திணைக்களத்தைச் சேர்ந்த சட்டவாதிகள் குழுவின் நெறிப்படுத்தலில், யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீண்டும் தடை கோரிய மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நேற்று நீதிமன்றில் நடந்த மனு மீதான விசாரணைகளில் கொழும்பில் இருந்து வந்த அரச சட்டவாதிகள் வாதங்களை முன்வைத்து, தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரியிருந்தனர்.
நினைவேந்தலின்போது பயன்படுத்தும் சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகள் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்துகின்றது என்றும் அவர்கள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர். வாதங்களை அடுத்து, மனு மீதான கட்டளை இன்று வழங்கப்படும் என்று நீதிமன்று அறிவித்திருந்தது.
இன்று நீதிமன்றில் இந்த வழக்கு கட்டளைக்காக எடுக்கப்பட்டது. நினைவேந்தலுக்குத் தடை கோரி பொலிஸார் சமர்ப்பித்த காரணங்கள் போதுமானவையாக இல்லை என்றும், அவர்கள் சமர்ப்பித்த சட்டப்பிரிவுக்கு அமையத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
நாட்டில் நிறங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக எந்ததச் சட்ட ஏற்பாடும் இல்லாத நிலையில், சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளைப் பயன்படுத்துவதைச் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது என்றும் நீதிமன்று சுட்டிக்காட்டியுள்ளது.