பேஸ்புக்கில் பெண்ணின் கணக்கொன்றின் மூலம் அறிமுகமாகி படங்களைப் பறிமாறிக் கொண்டபின்னர் ஆண்களை அச்சுறுத்திப் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவங்கள் அதிகம் வவுனியாவில் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளிக்கத் தயங்குவதால் இந்தக் கும்பல் தொடர்ந்தும் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றது என்று தெரிகின்றது.
பேஸ்புக் ஊடாக பெண்ணின் பெயரையும், படத்தையும் கொண்ட கணக்கொன்றில் இருந்துவரும் நட்பு அழைப்பில் இருந்து இந்த மோசடி ஆரம்பிக்கின்றது.
அந்தக் கணக்கை நட்பாக்கிக் கொண்ட பின்னர், பெண்ணொருவர் உரையாடலை ஆரம்பிக்கின்றார். கைபேசி ஊடாகவும் உரையாடல் ஆரம்பிக்கின்றது.
படிப்படியாக புகைப்படங்களைப் பரிமாறுக்கொள்ளும் அளவுக்கு அந்தப் பெண் உரையாடலைக் கொண்டு செல்கின்றார். படங்களைப் பரிமாறிக் கொண்டதும், அடுத்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
படங்கள் பரிமாறிக் கொண்ட சிறிது நாள்களில் அந்தப் இந்த விடயம் தனது கணவருக்குத் தெரிந்து விட்டது, வீட்டில் பெரும் பிரச்சினை என்று அந்தப் பெண் கூறுவார். கணவர் தனது கைபேசியை உடைத்துவிட்டார் என்றும் சொல்லுவார். அதன்பின்னர் அவரது தொடர்பு அற்றுப்போய்விடும்.
பின்னர் பெண்ணின் கணவர் என்று ஒருவர் அழைப்பெடுப்பார். தனது மனைவியுடன் எவ்வாறு உரையாடலாம் என்று பிரச்சினை எழுப்பி, அச்சுறுத்த ஆரம்பிப்பார். பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வேன் என்றும் மிரட்டுவார். படங்களை முகநூலில் வெளியிடுவேன் என்றும் அச்சுறுத்துவார்.
இதற்கிடையில் பிறிதொரு அழைப்பில் இருந்து அழைப்பு வரும். அதில் பேசுபவர் தன்னை பொலிஸ் என்று அறிமுகப்படுத்துவார். இந்தச் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளது, விசாரிக்க வேண்டும் என்று பயப்படுத்துவார்.
கணவர் என்று அறிமுகப்படுத்துபவர் உடைந்த கைபேசிக்கு பணம் வேண்டும், பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என்று சொல்ல தொடர் சம்பவங்களால் மிரண்டுபோய் இருப்பவர்கள் உடனடியாக பணத்தைக் கொடுத்துவிடுகின்றனர். ஈஸி காஸ் மூலம் பணம் பறிமாறப்படுகின்றது. 10 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபாவரையில் ஒவ்வொருவரிடமும் பறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளன என்று அறியமுடிகின்றது. ஆனால் பணத்தைப் பறிகொடுத்தவர்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இருப்பதால் பொலிஸ் முறைப்பாடு செய்யத் தயங்குகின்றனர். அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்த மோசடி தொடருகின்றது என்று தெரியவருகின்றது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பாகப் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.