வடக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் கொண்ட – நிரந்தர வீடுகள் அற்ற 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (செப்ரெம்பர் 22) நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட – நிரந்தர வீடுகள் அற்றவர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்துக்கான பயனாளிகளை இனங்காணும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வடக்கு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
நிரந்தர வீடு ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவைச் செலவிடும் என்றும், வீட்டுக்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பபடும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.
கடந்தகாலங்களில் தோல்வியடைந்த வீட்டுத் திட்டங்கள் போலல்லாது இந்தத் திட்டத்தை அதிகாரிகள் சரியான முறையில் திட்டமிட வேண்டும் என்று வடக்கு ஆளுநர் பணித்துள்ளார்.