தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (செப்ரெம்பர் 24) வட்டுக்கோட்டை மேற்கில் நடந்துள்ளது.
கி.ஹரிகரன் என்ற 3 வயது ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்றுக்காலை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவிட்டு தாய் ஏணையில் இட்டுள்ளார்.
சிறிதுநேரத்தின் பின்னர் குழந்தையை அவதானித்தபோது குழந்தை அசைவற்றுக் காணப்பட்டுள்ளது. பதற்றமடைந்த பெற்றோர் குழந்தையை சங்கானை பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று அறிக்கையிட்டுள்ளனர். குழந்தையின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை வலி.கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். தாய்ப்பால் புரைக்கேறியே குழந்தை உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.