North

கிளிநொச்சி மருத்துவமனையில் அகற்றப்பட்ட கர்ப்பப்பை! – கணவர் பொலிஸில் முறைப்பாடு!

கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்ட தனது மனைவியின் கர்ப்பப் பை அகற்றப்பட்டமைக்கும், சிசு உயிரிழந்தமைக்கும் மருத்துவர்களின் தவறே காரணம் என்று கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் கணவர் தனது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி தனது மனைவி பிரசவத்துக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும், மறுநாள் 27ஆம் திகதி அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் சிசு வெளியே எடுக்கப்பட்டபோது உயிரிழந்த நிலையிலேயே எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள கணவர், மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது என்றும் தெரிவித்தார்.

சிசு உயிரிழந்தமைக்கும், கர்ப்பப்பை அகற்றப்பட்டமைக்கும் மருத்துவர்களின் தவறே காரணம் என்று அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தச் சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வடக்கு மாகாண சுகாதாரத் துறை முன்னர் தெரிவித்திருந்தது.

Related Posts