கிளிநொச்சி, ஊற்றுப்புலம் கிராமத்தின் நாற்சந்தியில் இளைஞர் ஒருவரின் சடலம் வீசப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சி, கோணாவிலைச் சேர்ந்த பு.தினேஸ்கரன் என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
ஊற்றுப்புலம் கிராமத்தில் உள்ள நாற்சந்தி ஒன்றில் அவரது உடல் வீசப்பட்டிருந்தது. உடலில் அடிகாயங்கள் காணப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கிளிநொச்சிப் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டன. சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
இளைஞன் தாக்கப்பட்டுள்ளார் என்பதும், சுவாசப்பாதைக்குள் மண் சென்றதால் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்தார் என்பதும் உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்தது.
விசாரணைகளை ஆரம்பித்திருந்த கிளிநொச்சி பொலிஸார், ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தக் கொலைக்கு கஞ்சா வியாபாரமே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா வாங்கிய தினேஸ்கரன் 4 லட்சம் ரூபா பணத்தைக் கொடுக்காது இழுத்தடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
அதையடுத்து ஊற்றுப்புலத்தில் உள்ள ஆள்களற்ற வீடொன்றுக்கு அழைக்கப்பட்ட தினேஸ்கரன், பணத்தைக் கேட்டுத் தாக்கப்பட்டுள்ளார். கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் மயக்கமடைந்துள்ளார்.
மயங்கிய அவரை அருகில் உள்ள நாற்சந்தியில் வீசிவிட்டுத் தப்பித்துள்ளனர் தாக்குதல்தாரிகள்.
மண்ணுக்குள் வீசப்பட்ட தினேஸ்கரன் சுவாசித்தபோது, மண்ணும், புழுதியும் சுவாசப் பாதைக்குள் சென்றதால் மூச்சுத்திணறி இறந்துள்ளார்.
இந்தச் சம்பத்தில் 3 பேருக்குத் தொடர்பு உள்ளது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
ஊற்றுப்புலம், கோணாவில் மற்றும் அவற்றின் அயல் பிரதேசங்களில் போதைப்பொருள் வர்த்தகம் அமோகமாக நடக்கின்றது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
போதைப்பொருள் பாவனையால் அங்கு குழு மோதல்களும், வாள்வெட்டுக்களும் சர்வசாதாரணமாக நடக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.