முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த ரீ.சரவணராஜா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களால் வகித்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து அவர் வெளிநாடு பயணமாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் பூர்வீகமான வழிபட்டு வந்த இடத்தில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தது.
வழக்கு நடவடிக்கைகள் முடியும்வரையில் சர்ச்சைக்குரிய பகுதியில் எந்தக் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிபதி கட்டளை பிறப்பித்திருந்த நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறி அங்கு விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குருந்தூர்மலை விகாரை விடயத்தில் நீதிபதி பிறப்பித்திருந்த கட்டளைகள் தொடர்பில் அவர் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது.
நாட்டை விட்டு வெளியேறும் முடிவை அறிவித்துள்ள ரீ.சரவணராஜா, ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள கருத்தில் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருந்தூர்மலை வழக்கில் வழங்கிய கட்டளைகளை மாற்ற வேண்டும் என்று அரசாங்கத் தரப்பால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எனக்கு அச்சுறுத்தல்களை விடுக்கின்றனர்.
அண்மையில் எனக்கான (நீதிபதிகளுக்குரிய) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருந்தது. படைத்தரப்புப் புலனாய்வாளர்கள் என்னைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர்.
சட்டமா அதிபர் என்னை (நீதிபதியை) 21.09.2023 ஆம் திகதி என்னைத் தனது அலுவலகத்தில் சந்திக்க அழைத்தார். குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளையை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.
குருந்தூர்மலை வழக்குடன் என்னைத் தொடர்புபடுத்தி (நீதிபதியை) எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.
எனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.
எனது பதவி விலகல் கடிதத்தைக் கடந்த 23.09.2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பியுள்ளேன் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தில் ரி.சரவணராஜா தெரிவித்துள்ளார்.
அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.